Skip to main content

ஆழ்துளை கிணறுகளை மூட கலெக்டர் உத்தரவு! தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!!!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

dindigul collector issues order to close unused borewells

 

 

இந்த சம்பவத்திற்கு பின்னர் பயனில்லாத திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வத்தலக்குண்டு பகுதியில் உள்ள திருநகரில் தனியார் இடத்தில் சாலையோரம் பயன்படாத திறந்த நிலையில்  இருந்த 4.5" ஆழ்துளை கிணறு பல நாட்களாக யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தத்த்து. தற்போது அனிஸ் என்பவர் திறந்த ஆழ்குழாய் கிணறு குறித்து  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து,  தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், பாலாஜி உள்ளிட்டோர் அங்கு விரைத்து வந்து ஆழ்துளை கிணறு பாதிப்பின்றி கற்களைக் கொண்டு பாதுகாப்பாக மூடினார்கள். அதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினர் மூடும் நடவடிக்கையிலும் இறங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி அறிக்கை  ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தனியார் மற்றும் துறை ரீதியாகவும் ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுவப்பட்டுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். மேலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூடி போட்டு மூடப்பட்டு இருக்க வேண்டும். தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் மற்றும் காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்துத் துறை ரீதியாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் மூடி போடாமல் அசம்பாவிதம் நடக்க நேரிட்டால் துறை ரீதியாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். அதைத்தொடர்ந்து அதிகாரிகளும் அதிரடியாக மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தபுள்ளி கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை குழாய் இருந்தது கண்டறியப்பட்டு, அதை கண்டு உடனடியாக அதிகாரிகள் மூடினார்கள். அதுபோல் மற்ற பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதுபோல் தீயணைப்புத் துறையினரும் ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். இப்படி ஒட்டுமொத்தமாக மாவட்ட நிர்வாகமே ஆழ்துளை கிணறுகளை மூடு முயற்சியில் களமிறங்கி வருகிறார்கள். இது பொதுமக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வுவை  ஏற்படுத்தி வருகிறது

 

 

சார்ந்த செய்திகள்