திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் 261 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாலை அணிவித்து, சந்தனம் பூசி, வளையல் அணிவித்த எம்எல்ஏ தேன்மொழி அனைவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி பேசும்போது... பெண்கள் தாய்மை அடைவது மிகப்பெரிய வரப்பிரசாதம், நீங்கள் கர்ப்பமான மாதம் தொடங்கியது முதல் குழந்தை வளர்ச்சி ஆரம்பிக்கும் போது, கருவில் இருக்கும் குழந்தைக்கு நீங்கள் பேசுவது அனைத்துமே கேட்கும். நீங்கள் உங்கள் மாமனார் மாமியாருடன் மற்றும் உறவினர்களுடன் சண்டை போடும் வார்த்தைகளை குழந்தை கேட்கும். எனவே யாரிடமும் சண்டை போடாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள். சந்தோசமாக இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சுகப்பிரசவம் தான் சிசேரியனுக்கு அவசியமில்லை.
மேலும் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாதத்திலே புட்டிபால் கொடுத்து விடாதீர்கள். அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தாய்ப்பால் தரவில்லை என்றால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அறிவார்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குழந்தைகள் வளர வேண்டுமென்றால் அவசியம் தாய்ப்பால் கொடுங்கள்... மீண்டும் மீண்டும் உங்களை கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளரும் எம்.எல்.ஏவின் கணவருமான சேகர். முன்னாள் எம்.பி.உதயக்குமார் மற்றும் நகர ஒன்றிய பொருளாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.