Skip to main content

தோட்டங்களில் மணலை திருடி கிரசர் மணலை  கலந்து செயற்கை மணலாக விற்பனை!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
m

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத வகையில் மண் திருட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நிலக்கோட்டை ஒன்றிய பகுதியிலிருந்து தொடர்ந்து மணல் மற்றும் மண் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு சின்னாளபட்டி, செம்பட்டி, ஆத்தூர் மற்றும் கொடைரோடு பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சின்னாளபட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சுற்றியுள்ள உத்தயகவுன்டன்பட்டி, கதிரிபட்டி, திருமயகவுன்டன்பட்டி கிராமப்பகுதிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களையும், குளக்கரைகளை உடைத்து மண் திருட்டு மற்றும் சவுடு மண் திருட்டு நடைபெறுகிறது. மாலை நான்கு மணியளவில் பொக்லைன் இயந்திரம் கொண்டு நீர்வரத்து ஓடையில் மண்கள் எடுக்கப்பட்டு டிப்பர் லாரிகள் மூலம் விடிய விடிய அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் மண்களை குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். 

 

m

 

மண்ணுடன் கிரசர்தூள் மற்றும் பாறை உடைக்கும் பவுடர்களை கடந்து செயற்கை மணல் என கூறி விற்பனை செய்துவருகின்றனர். இதனால் நடுப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் நீர்வளம் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றது. நடுப்பட்டி கிராமம் வரை ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமாகவும், அதனை சுற்றியுள்ள கிராமங்கள் நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு கட்டுப்பட்டது என்பதால் மண் மற்றும் மணல் திருடர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது. குறிப்பாக நிலக்கோட்டை தாலுகா வட்டாட்சியர் கண்டுகொள்ளாததால் அப்பகுதியில் அதிக அளவில் மண் திருட்டு நடைபெறுகிறது. 

 

m

 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியபோது... பெருமாள்கரடியிலிருந்து மழை தண்ணீர் வருவதுபோல் வாய்க்கால் வருகிறது. அப்பகுதியில் உள்ள சின்னக்கவுண்டன் குளத்தில் நிரம்பி அதன் பின்னர் அம்மன் வாய்க்கால் (சீலைவாய்க்கால்) என்று அழைக்கப்படும் நீர்வரத்து வாய்க்கால் மூலம் மழை தண்ணீர் திருமயக்கவுண்டன்பட்டி அருகே உள்ள பெரியகவுண்டன் குளத்திற்கு வருகிறது. மழை தண்ணீர் வாய்க்காலை உடைத்து நாகராஜ் என்பவர் தோட்டத்திற்கு அருகே மண் மற்றும் சவுடு மண்ணை திருடி வருகின்றனர். கேட்டால் உங்களுக்கு நாங்கள் மழை தண்ணீர் தேங்குவதற்கு குளம் அமைத்துக் கொடுக்கிறோம் என கூறுகின்றனர். வருவாய்துறை அதிகாரியிடம் கூறினால் கண்டுகொள்வதில்லை. இரவு 7 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நடுப்பட்டி, கதிர்பட்டி வழியாக டிப்பர் லாரிகளில் மண் மற்றும் மணலை கொண்டு செல்லும்போது செம்பட்டி காவல்நிலைய அதிகாரிகளோ, சின்னாளபட்டி காவல்நிலைய அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெறுகிறது என்றனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவள அதிகாரிகள் மண் திருட்டை கடுமையாக நிறுத்தி வைத்தநிலையில் நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் மட்டும் மண் திருட்டு படுஜோராக நடைபெறுவது வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தகுந்த நடவடிக்கை எடுத்து மண் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அப்பகுதியில் குவித்து வைத்துள்ள மண் மற்றும் மணல் குவியலையும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்!

 

 

சார்ந்த செய்திகள்