
வன்னியர் சங்க மாநாட்டிற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாமக சார்பில் நேரடியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வரும் மே பதினொன்றாம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பாமக சார்பில் வன்னியர் சங்கத்தின் 'சித்திரை முழு நிலவு மாநாடு' நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதற்கான அழைப்பிதழை பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அரக்கோணத்தில் இருந்த விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான அழைப்பிதழை பாமக நிர்வாகிகள் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தல்படி வழங்கினர். அழைப்பிதழை இன்முகத்தோடு பெற்றுக்கொண்ட திருமாவளவன் மாநாடு வெற்றி பெற வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
அரசியலில் எதிர் எதிர் துருவங்களில் பயணித்து வரும் பாமக-விசிக இடையே இதற்கு முன்னர் பலமுறை மோதல் போக்குகள் இருந்து வந்தது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற பாமகவின் மாநாட்டில் விசிக கொடிக் கம்பம் தொண்டர்களால் அகற்றப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.