Skip to main content

‘இன்னைக்கு லீவு..’ - அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ். பதில்

Published on 18/04/2025 | Edited on 18/04/2025

 

o'panneerselvam talk about bjp aiadmk alliance

தமிழ்நாட்டில்  2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது.

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து அறிவிப்பை சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அன்று நடந்த செய்தியாளர்களைச் சந்திப்பின் போது தெரிவித்தார்.  பாஜகவுடன், அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக - பா.ஜ.க கூட்டணி யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்குத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தேர்தல் கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியமில்லை. அது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். கூட்டணி குறித்து சமூக ஊடகப் பக்கங்களில் பா.ஜ.கவினர் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. சனாதனத்திற்கு எதிரான ஆட்சி, ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்பது நமது குறிக்கோளாகவும் லட்சியமாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் பொறுப்புள்ள நாம் அனைவரும், இனி பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, அதிமுகவின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கட்சியின் தலைமையின் அனுமதி பெறாமல் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என அதிமுக தலைமைக் கழகம் கட்டுபாடு விதித்திருந்த நிலையில், பா.ஜ.கவிலும் அந்த கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவையில் ஒரு வாரக் கால ஆயுர்வேத சிகிச்சையை முடித்துக்கொண்டு இன்று வீட்டிற்கு புறப்பட்டபோது ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும், அந்த கூட்டணி வெற்றி பெறுமா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு, “இன்று லீவு, வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. புனித வெள்ளி வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் கிளம்பிச்சென்றார்.

சார்ந்த செய்திகள்