
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி (07.03.2025) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. அப்போது மக்ஃரிப் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகை முடிந்ததும் அக்கட்சியின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெற்றது. இதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமியர்களோடு கலந்துகொண்டார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், “எனது அன்பான, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைப் பின்பற்றி மனிதநேயத்திற்கும் சகோதரத்திற்கும் பின்பற்றி இங்கு உள்ள அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் என்னுடைய இந்த அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டது நீங்கள் எல்லோரும் இங்கு வந்து கலந்துகொண்டதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி (THANK YOU)” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மௌலானா சகாபுதீன் ரஸ்வி, “த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும். சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்திருக்கிறார். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜய்யின் செயல்பாடுகள் இருக்கிறது. அவரது பின்னணி மற்றும் வரலாறே இஸ்லாத்திற்கு எதிரானது” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு என் தம்பிய பற்றி தெரியும். அவர் உள்நோக்கத்தோடு செய்திருக்க மாட்டார். விஜய் ஒரு எதார்த்தமான ஆள். கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக அப்படி எல்லாம் பேசுகிறார்கள். இதுபோன்று நீங்கள் பேசினீர்கள் என்றால் அடுத்த முறை இஃப்தார் நோன்புக்கு அழைத்தால் விஜய் வருவாரா? அதனால் திரும்பத் திரும்ப சொல்கிறேன், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தம்பி விஜய்யின் மீது வைக்காதீர்கள்” என்றார்.