திண்டுக்கல் மாவட்டத்தில் தேஜஸ் விரைவு இரயிலை திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டியும், அமிர்தா விரைவு இரயிலை ஒட்டன்சத்திரம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டியும், திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள இரயில் நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மத்திய இரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது....
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சியானது மையப்பகுதியாகும். திண்டுக்கல் ஆனது தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மாநகரமாகவும் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் தமிழகத்திலே பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்து வந்து செல்கின்றனர். திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கனி சந்தை உள்ளது. இச்சந்தையிலிருந்து நாள்தோறும் டன் கணக்கில் காய்கனிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெளி மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து இச்சந்தையில் காய்கனிகளை வாங்கி செல்கின்றனர். அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் தயிர், வெண்ணெய் சந்தை உள்ளது. இச்சந்தையிலிருந்தும் கேரளா, ஆந்திரா, நாக்பூர், புனே போன்ற வெளி மாநிலங்களுக்கும் பால்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் ஆனது தமிழகத்திலே புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இச்சுற்றுலா தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
எனவே இரயில்வேதுறை சம்மந்தப்பட்ட கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும், வியாபாரிகளுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
1.மதுரை முதல் சென்னை வரை இயங்கி வரும் தேஜஸ் விரைவு இரயிலை திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.திருவனந்தபுரம் முதல் மதுரை வரை இயங்கி வரும் அமிர்தா விரைவு இரயிலை ஒட்டன்சத்திரம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.பாலக்காடு முதல் (கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, செங்கல்பட்டு வழியாக) புதிய இன்டர்சிட்டி விரைவு இரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.கோவை முதல் இராமேஸ்வரம் வரை இயங்கி வந்த இரயிலை மீண்டும் இவ்வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.கோவை முதல் நாகர்கோவில் வரை இயங்கி வரும் இரயிலை பழனி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.மேட்டுப்பாளையம் முதல் மதுரை வரை புதிய இரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7.பழனி முதல் பெங்களுர் வரை புதிய இன்டர்சிட்டி விரைவு இரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள இரயில் நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மத்திய இரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியிடம் அளித்தார்.
அதற்கு இரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி அவர்கள் தேஜஸ் இரயிலை திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கும், அமிர்தா விரைவு இரயிலை ஒட்டன்சத்திரம் இரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கும், தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கும் கண்டிப்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.