அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தது குறித்தும், டிடிவி தினகரன் மதுரையில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார்,
தமிழக அரசுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது தவறு. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் பட்ஜெட் இருக்கும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம், அதன் பிரதிபலிப்பாகவே பட்ஜெட் இருக்கும் . துயரத்தின் வெளிபாடாகவே திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வருகை.
சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்து சட்டப்பேரவை தான் முடிவு செய்யும். அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.