ஆட்சி இன்று கலைந்துவிடும், நாளை கலைந்து விடும் என பொய் பேசியே 18 எம்.எல்.ஏ-க்களின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டார் என அ.ம.மு.க.துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றஞ்சாட்டிள்ளார் அண்ணா திராவிடர் கழக தலைவரான திவாகரன்.
சிவகங்கை சீமை காத்த மருதிருவரின் 217வது குருபூஜையை முன்னிட்டு, உள்ளூர் மக்கள் தொடங்கி சமுதாயத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மருதிருவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனின் ஒரு பகுதியாக சசிகலா குடும்ப உறவினரும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் இன்று அஞ்சலி செலுத்திவிட்டுப் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய டி.டி.வி.தினகரன் அவர்களை முன்பே ராஜினாமா செய்ய வைத்திருந்து இடைத்தேர்தலை சந்தித்திருக்கலாம். முன்பு தீர்ப்பு வரும் பொழுதே மேல்முறையீடு செய்யாதீர்கள், மக்கள் மன்றத்தில் சந்தியுங்கள் என எனது கருத்தை தெரிவித்திருந்தேன். அதை செவிமடுக்கவில்லை தினகரன் தரப்பு. அப்பொழுதே இடைத்தேர்தலை சந்தித்திருந்தால் தொகுதி மக்கள் நிம்மதி அடைந்திருப்பர். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்களும் கிடைத்திருக்கும். அவர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும். இன்று ஆட்சி கலைந்துவிடும், நாளை கலைந்து விடும் என பொய் பேசியே 18 எம்.எல்.ஏ-க்களின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்." என பகிரங்கமாகவே தினகரன் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார் அவர். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.