சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பின் D பிளாக் கட்டடத்தில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீடுகள் இடிந்து விழுந்த இடத்தில் ஐந்து தீயணைப்புப்படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இடிந்து விழுந்த D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டதால் 24 குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டனர். 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது; உயிர்ச்சேதம் இல்லை. இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது" எனத் தெரிவித்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் அரிவாக்குளம் குடியிருப்பில் தங்கி இருந்தவர்களுக்கு மாற்று வீடுகள், ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்.