![Depressed young man ... parents in grief](http://image.nakkheeran.in/cdn/farfuture/10dXyju1VADVqmVXkBv2pkvIDMjLGh4zFFvsI8LC9q0/1628686615/sites/default/files/inline-images/died-1_22.jpg)
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென்று இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த சில தினங்களாக புதிய செல்போன் வாங்கி தர வேண்டும் என்று தமிழ்ச்செல்வன் தனது தாயுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்தது தெரியவந்தது. செல்போன் வாங்கி தர மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த தமிழ்ச்செல்வன், தன்னுடைய அறையில் சென்று தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். ஆனால், அதன் பின் உண்மையாகவே அறையை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெகுநேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் தமிழ்ச்செல்வனின் தாய் அறைக்கதவைத் தட்டியுள்ளார். ஆனால், உள்ளே இருந்து எந்த பதிலும் வராத நிலையில், அக்கம்பக்கத்தினர் அழைத்து கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது தமிழ்ச்செல்வன் பிணமாகத் தூக்கில் தொங்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.