Skip to main content

களப்பிரர் வரலாற்று ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020
Demand for Preservation of Field Inscriptions

 

தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வருகிறது. கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் இக்கல்வெட்டைப் பார்வையிட்ட பின் இதுபற்றி கூறியதாவது,

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக் கொண்டது.

தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான இக்கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து மழை,வெயில் போன்றவற்றால் கல்வெட்டு பாதிக்காத வகையில் கூரை அமைத்துப் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்