Skip to main content

கிள்ளை சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி தொடக்கம்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Deepening of Killai Chinnavaikal estuary commenced

 

சிதம்பரம் அருகே கிள்ளை சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரம் மணல் முட்டுகளால் தூர்ந்து விட்டதால் கடந்த சில மாதங்களாகக் கிள்ளை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் மிகவும் சிரமம் அடைந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பிச்சாவரம் சுற்றுலா மையப் பணிகளை ஆய்வு செய்யத் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது அவரிடம் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சின்ன வாய்க்கால் கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

 

இதன் அடிப்படையில் அமைச்சர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜியிடம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பணிகளைத் துவக்க உத்தரவிட்டார். அதன் பெயரில் பொதுப்பணித்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.  இதில் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கிள்ளை பில்லுமேடு, சின்ன வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கிள்ளை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.