Skip to main content

சர்க்கரை ஆலை குடியிருப்புக்கு மின்சாரம், குடிநீர் துண்டிப்பு... வங்கி முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

CUDDALORE DISTRICT SUGAR FACTORY EMPLOYEES BANK

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்துள்ள இறையூரில் ஸ்ரீஅம்பிகா தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்தச் சர்க்கரை ஆலையில் பணியாற்றிவரும் பணியாளர்கள், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாகம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் தொகையினை திரும்பச் செலுத்தாத காரணத்தால் வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சர்க்கரை ஆலையை வங்கி நிர்வாகங்கள் கையகப்படுத்தியுள்ளன.

 

அதையடுத்து, 10 நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில்  உள்ள குடியிருப்புகளில் குடியிருந்தத் தொழிலாளர்களின் வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தி, தொழிலாளர் குடும்பங்களை அந்த வளாகத்திலிருந்து விரட்டுவதில் ஆலை நிர்வாகம் மற்றும் வங்கி நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருவதாக தொழிலாளர்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும் தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி போன்றவற்றை ஆலை நிர்வாகம் கொடுக்காததால், வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் அவர்கள் அங்கேயே இருந்து வருகின்றனர்.  

 

இந்நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தது குறித்து தொழிலாளர்கள் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று ஆலையின் அருகே உள்ள வங்கியின் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலை நிர்வாகம் மற்றும் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

 

இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் காவல் துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். அதன்பின்னர் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொழிலாளர்களின் திடீர் ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


 

சார்ந்த செய்திகள்