Skip to main content

சிவப்பு காவியானது ஏன்? – கம்யூனிஸ்டுகள் "கலக" குரல்

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பிரதமராக இரண்டாவது முறையும் மோடியே பதவி ஏற்க உள்ளார்.  இந்த நிலையில் வடமாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட செல்வாக்கு தென் மாநிலங்களில் இல்லை என்பது தேர்தல் முடிவு வெளிக்காட்டியது. குறிப்பாக கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களான கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தனது வாக்கு பலத்தை கூட்டியுள்ளது.

 

c

 

இருப்பினும் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.  ஆனால் திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  அதேபோல் தொடர்ந்து கம்யூனிஸ்டுகளால் கோட்டை என கூறப்படும் மாநிலம் மேற்குவங்கம் நீண்டகால முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு.  ஒரு கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக கூட ஜோதிபாசுவை மற்ற கட்சிகள் முன்னிறுத்தியது.  அந்த அளவுக்கு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட தலைமைப் பண்பும் கொண்டவராக ஜோதிபாசு இருந்தார்.  அதேபோல் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவான அமைப்பை வழி நடத்தி வந்தார்.

 

அந்த மேற்குவங்கத்தில் தான் ஜோதிபாசுவுக்கு அடுத்ததாக முதல்வராக வந்தவர்  புத்ததேவ் பட்டாச்சாரியா. அவருக்கு செல்வாக்கு குறைந்து வந்தது.  அவருக்கு மட்டுமல்லாமல் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பலத்தை இழக்கும் சூழல் தொடர்ந்து வந்தது.  ஒரு கட்டத்தில் அங்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரி முனல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கிய மம்தா பானர்ஜி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அதிகாரத்தைப் பறித்தார். 

 

மம்தா பானர்ஜி தேர்தல் மூலம் முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து இரண்டு முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பில் உள்ளார்.   இந்த நிலையில்தான் தற்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் நிலைபாட்டையும், கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக தவறாக பயன்படுத்தி விட்டது என்றும் கம்யூனிஸ்டுகளிடம் நாடு முழுக்க கொந்தளிப்பான குரலை கேட்க முடிகிறது.

 

  ஏன் என்று கேட்டால் நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தை செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை முறியடித்த மம்தா பானர்ஜிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவுகோல் படி பாரதிய ஜனதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல தொகுதிகளில் வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்தது.  கம்யூனிஸ்ட் கொடியான செங்கொடியை ஏந்திய கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் காவி கொடியை பல தொகுதிகளில் ஏந்திச் சென்று வாக்கு கேட்ட கொடூரங்களும் நிகழ்ந்துள்ளது .

 

எதிரிக்கு எதிரி நண்பன் என்றாலும் எதிரியை முறியடிக்க வேறு வகையான யுக்திகளை கையாண்டிருக்கலாம்.  நாடு முழுக்க மதசார்பற்ற நிலையை உரக்கப் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி மதவாத கட்சியான பாஜக வுடன் மறைமுகமாக கூட்டணி வைத்ததோடு ஒட்டு மொத்த பலத்தையும் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இழந்துள்ளது. இது நாடு முழுக்க உள்ள இடதுசாரி சிந்தனையாளர்களை அதிரவைத்துள்ளது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் வினோதங்கள் மிகப்பெரிய விவாதப்பொருளாக இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும்  இடதுசாரி அமைப்புகளில் தொடங்கியுள்ளது.


 
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வரலாற்றுப் பிழையை செய்துவிட்டது.  இந்த வரலாற்றுப் பிழையை யாராலும் மன்னிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இடதுசாரி அமைப்புகள் இப்பொழுது வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டது. இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் கொந்தளிப்புகள் தொடங்கிவிட்டது.

 

 குறிப்பாக கேரளாவில் உள்ள மூத்த நிர்வாகிகள் மேற்குவங்கத்தில் எடுத்த நிலைபாடு கட்சியை அழிக்கும் செயல் என்று பேசத் தொடங்கி உள்ளார்கள்.  இது சம்பந்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழுவும் தனித்தனியாக ஜூன் மாதத்தில் அரசியல் தலைமை குழுவை கூட்டி விவாதிக்க உள்ளது.  அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையை அக்கட்சி வெளிப்படுத்த போகிறது. அரசியல் ரீதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் இந்த கூட்டத்திற்கு பிறகு புதிதாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்