
கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் தொழில் அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்தை இழந்து வாடும் புதுக்கோட்டை மாவட்ட மக்களை காக்க பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அதற்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீரமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாநிலக்குழு சின்னத்துரை, நாகராஜன் மற்றும் மாவட்டக்குழு உடையப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 20 ஆயிரம், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி, கல்விக்கடன், சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஓடு, கூரை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி மற்றும் பல்வேறு ஒன்றியங்களில் இருந்தும் சுமார் ஆயிரம் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டு சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும் முதலமைச்சருக்கு மனு அனுப்பினார்கள். அந்த மனுவில்.. தனியார் நிதிநிறுவனங்களின் கட்டாய வசூலை நிறுத்தக் கோரியு முழக்கமிட்டனர். தொடர்ந்து அனைத்து பெண்களும் தங்கள் பகுதி கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் தனியார் நிதிநிறுவனங்களில் பெற்ற கடன்களை வசூலிக்க கட்டாயப்படுத்தி வருவதுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் 6 மாத கால அவகாசம் கொடுத்த பிறகும் வசூலுக்கு வந்து அவமானப்படுத்தி பேசுகிறார்கள். ஆகவே அந்த கடன்களை தமிழக அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பாலகிருஷ்ணன் பேசியதாவது.. கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் பச்சை துரோகம் செய்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க முன்வரவில்லை. அதனால் தான் விவசாயிகள் ஏதாவது கிடைக்குமா என்று சாலைகளில் கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ரூ. 15 ஆயிரம் கோடி கேட்டு மனு கொடுத்தார் 40 ஆட்கள் ஆகிவிட்டது எந்த பதிலும் இல்லை. தமிழகத்தை பிரதமர் மோடி ஒதுக்கி பாhக்கிறார். புயல் பாதித்த மக்களை பார்க்க வராத பிரதமர் ஓட்டுக் கேட்க சென்னை வருகிறார்.
மொத்தமாக விவசாயம் பாதிக்கப்பட்டு விட்ட நிலையில் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பது என்பது வருத்தமளிக்கிறது. அதனால் தான் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய சொல்கிறோம். பசுமை வழிச்சாலைக்கு ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் கொடுக்க முன்வந்த அரசுக்கு இங்கே கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ. 1100 என்பது எந்த வகையில் ஏற்புடையது. வுpவசாயிகளை பிரித்து பார்க்கிறார்கள். நிவாரணம் கொடுப்பதாக குறைந்த நபர்களுக்கு கொடுப்பதால் மக்கள் சாலை மறியல் போன்ற போராட்டத்திற்கு போகிறார்கள். போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு போராட்டங்களை முடக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. போராடும் மக்கள் மீது வருவாய் துறையை வைத்து புகார் கொடுக்க மிரட்டுவதும் கொடுக்கவில்லை என்றால் இடமாறுதல் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் போராட்டங்களை முடக்க முடியாது. நெடுவாசல் போல எழுந்து வருவார்கள் மக்கள். சீப்பை ஒழித்தால் கல்யாணம் நின்று விடாது. அது போல எத்தனை வழக்கு போட்டாலும் போராட்டங்கள் நடக்கும்.
ஒரு மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அந்த மாவட்ட மக்களுக்கு செய்யும் நலப்பணிகளைப் பார்த்து மக்கள் பாராட்ட வேண்டும். முழு நிவாரணம் பெற்றுக் கொடுத்தேன் என்று பெருமையாக சொன்னால் அதை மக்கள் பாராட்டுவார்கள். ஊடகங்களும் பாராட்டி எழுதும். ஆனால் அதை செய்யாமல் அமைச்சர் வீட்டில் ரைடுää உதவியாளருக்கு சம்மன்ää 7 மணி நேரம் விசாரணை என்று செய்திகள் வந்தால் அந்த அமைச்சரை எப்படி மக்கள் பாராட்டுவார்கள். கேரளாவில் புயல் பாதிக்கப்பட்ட போது இழப்பீடுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் முழுமையாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இங்கே 40 நாட்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் புதுக்கோட்டை போன்ற புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களையும் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்றார்.