![CORONAVIRUS LOCKDOWN FINANCE ISSUES CUDDALORE DISTRICT](http://image.nakkheeran.in/cdn/farfuture/805s2FD-f3W2uEKhQIScc_9hCluj97i6zFLVxVBfEvk/1594444092/sites/default/files/inline-images/CUDDALORE34.jpg)
தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கட்டாய வசூல் தவணை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி கூறியுள்ளார்.
கரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணையை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. ஆனால் அதையும் மீறி பொதுமக்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணையைக் கட்டாயமாக வசூலித்து வருகிறது. மேலும் வட்டிக்கும் வட்டி, அபராத வட்டி என கூடுதலாக வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் சில நிறுவனங்கள் தவணை தேதிக்கு முன்னும், பின்னும் காசோலையை வங்கிகளில் செலுத்தி ரிட்டன் தொகை, அபராதத் தொகை என வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்தும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே பணத்தை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவைகளைக் கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி செய்தியாளர்களிடம், "தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கட்டாயமாக தவணையை வசூலிப்பதாக இதுவரை 2 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிதிக் கடன் நிறுவனங்களின் நெருக்கடி தொடர்பான புகார்கள் மீது சார் ஆட்சியர், வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் 3 மாதம் அவகாசம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளேன்" என்றார்.