சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு தடை காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி இருந்தனர். வேலைக்குச் செல்ல முடியாததால் கும்பத்தை நடத்த சிரமப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சி. கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அம்சாவேணுகோபால் மற்றும் பிச்சாவரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் தலைவர் வேணுகோபால் ரூபாய் 250 ரூபாய் மதிப்பில், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் 1,500 பேருக்கு மளிகைப் பொருட்களை வழங்க சொந்த செலவில் ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை அன்று சி. கொத்தங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகே நடைபெற்றது. இதில் பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வேணுகோபால் மற்றும் சி. கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அம்சாவேணுகோபால் கலந்துகொண்டு மளிகைப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் கூறுகையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரேஷன் கடையில் அரிசி கிடைத்துவிடுகிறது. குழம்பு வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கமுடியாமல் சிரமப்பட்டோம். தற்போது மளிகைப் பொருட்கள் கொடுத்தது சிறு உதவியாக இருந்தாலும் பேருதவியாக உள்ளது என்று கூறிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் சி.கொத்தங்குடி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.