மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, கேரளா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை (22/03/2021) முதல் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. கரோனா அதிகரிப்பு, மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்பு தொடர்ந்து நடைபெறும். மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்டப்படி நடைபெறும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதிக்கலாம். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி 12- ஆம் வகுப்பைத் தொடர்ந்து நடத்த அனுமதி அனுமதிக்கலாம். 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியுள்ளதால் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.