Skip to main content

"கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"- சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேட்டி!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

 

coronavirus cuddalore district special officer inspection

 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும், மாவட்ட அளவிலான தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மாவட்டந்தோறும் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்து உள்ளது. 

 

அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு கண்காணிப்புச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகளிடம் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று (26/06/2020) கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்டத்திற்கு வந்தார். 

 

நேற்று (26/06/2020) காலை கடலூர் மாவட்ட எல்லையான சின்ன கங்கணங்குப்பம் சோதனைச் சாவடிக்கு வந்தவர், சோதனைச்சாவடியில் நடைபெற்று வரும் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் கடலூர் நகராட்சியில் கட்டுப்பாட்டுப் பகுதிகளான ஆல்பேட்டை, திருப்பாப்புலியூர், வெள்ளி மோட்டான் தெரு ஆகிய கண்காணிப்புப் பகுதிகளை ஆய்வு செய்தார். 

 

மதியம் சிதம்பரம் மீதிகுடி நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பகுதிகளில் ஆய்வு செய்தவர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கோல்டன் ஜுப்ளி ஹாஸ்டலை பார்வையிட்டார். அதன்பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, கண்ணீருடன் கலங்கி நின்ற கரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும், ஆறுதலும் கூறினர். சிதம்பரத்திற்குச் சென்ற ககன்தீப்சிங் பேடியை நடராஜர் கோவில் டிரஸ்டி கைலாச சங்கர தீட்சிதர் உள்பட 3 தீட்சதர்கள் சந்தித்து ஆனித்திருமஞ்சன விழாவில் பொதுமக்கள், சிவனடியார்கள் பெண்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்து அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

 

மாலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, "தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் இரண்டு மாதங்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், வியாபாரிகள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிப்பதுடன் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

coronavirus cuddalore district special officer inspection

 

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட உதவ வேண்டும். கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

 

பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கடந்த 10 நாட்களாக யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தைக் கண்டிப்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 

 

அதன்மூலம் அவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர், உமிழ்நீர்ப் பரிசோதனைக் கருவி, N-95 முகக்கவசம் போன்றவைகள் இருக்கிறதா? குறைபாடுகள் உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

தொற்றுடையர்வர்கள், சிகிச்சை பெற்றவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க 10 நாட்கள் கபசுர குடிநீர் கண்டிப்பாகப் பருக வேண்டும். மேலும் சிங் மாத்திரை உட்கொள்ள வேண்டும். பொதுமக்களும் சரியான விதத்தில் கபசுர குடிநீர் பருகலாம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்