நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 93 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மராட்டியத்தில் 11 தொகுதிகளிலும் கோவாவின் 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் அஸ்ஸாம் - 3, பீகார் - 5, சத்தீஸ்கர் - 7, மத்தியப் பிரதேசம் - 8 (பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து 2 ஆம் கட்டத்திலிருந்து 3 ஆம் கட்டத்துக்கு மாற்றப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதிக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “மக்களவை தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம், வரலாற்றில் முதல்முறையாக இப்படி தாமதம் செய்கிறது. முந்தைய சந்தர்ப்பங்களில், வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. இந்த நேரத்தில் என்ன மாறிவிட்டது? அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் ஆணையம் வழங்கத் தவறியது ஏன்? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? வாக்களித்த 24 மணி நேரத்திற்குள் முக்கியமான புள்ளிவிவரங்களுடன் வாக்காளர்களின் வாக்குப்பதிவுத் தரவு வெளியிடப்பட்டிருந்தால், தொகுதிகள் முழுவதும் அதிகரிப்பு காணப்பட்டதா என்பது நமக்குத் தெரிந்திருக்கும்.
தேர்தல் ஆணையம் ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டும் வெளியிடாமல், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், சட்டமன்றத் தொகுதி மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில், அரசியல் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட புகார்களைக் குறிப்பிட வேண்டும். அதனால், தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையாக சந்தேகங்களை எழுப்புகின்றன.
இத்தகைய முரண்பாடுகளுக்கு எதிராக நாம் கூட்டாகவும், ஒற்றுமையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் குரல் எழுப்ப வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், துடிப்பான ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதே நமது ஒரே நோக்கம். இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வோம், அதற்கு பொறுப்புக் கூறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.