கரோனா வைரஸ்க்கு எதிரான உலக நாடுகள் ஒன்றுபட்டு போராடுகிறது. கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடம் மோதிய வல்லரசுகள் இப்போது கண்ணுக்கு தெரியாத கரோனா வைரஸ்சுடன் நவீன மருத்துவம் என்ற ஆயுதத்தால் கடும் போர் புரிந்து வருகிறார்கள். நடைமுறை எதார்த்த நிகழ்வுகள் ஒருபுறமிருக்க பெரும்பாலான மக்களின் நம்பிக்கை அவரவர் சார்ந்த பக்தி மார்க்கம். இதில் எல்லோரும் வேண்டுவது இறைவா கரோனா வைரஸை அழித்து மனிதர்களை காப்பாற்று என்பது தான் ஆனால் உண்மையில் அந்த கடவுள்களை நேரில் போய் தரிசிக்க முடிகிறதா என்றால்...."வேண்டாம்... வேண்டாம்... கோயிலுக்கு போகாதீங்க.. என்ற குரல் அறிவிப்பாக வருகிறது. இந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் தந்தை பெரியாரோ அல்லது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களா.. என்றால் இல்லவே இல்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் தான் இப்படி கூறுகிறது. இதற்கு காரணம் மக்கள் கூட்டம் கூடினால் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு யாருக்கும் வந்து விடக் கூடாது என்பது தான். மக்கள் கோயிலுக்கு செல்வது மட்டுமல்ல அக்கோயிலில் உள்ள கடவுளுக்கு வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாவும் வைரஸ் பயம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது வினோதமாக,விசித்திரமாகவும் உள்ளது.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் இத்திருவிழா நடக்கும். மாவிளக்கு கம்பம் நீராட்டு என கோலாகலமாக இருக்கும் சுமார் மூன்று நான்கு லட்சம் மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்தப் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா இப்போது நிறுத்தப்பட்டு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் மாவட்டத்திலுள்ள அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா அதுவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளும் கர்நாடகாவில் உள்ள மலை மாதேஸ்வரன் கோயில் தேர் திருவிழா அதில் திருவிழா கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டதோடு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்தபடியாக மிக முக்கியமானது பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா தமிழக எல்லையான சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. இது மலைப் பகுதியை ஒட்டியுள்ள கோயில்.
தமிழக மலைக் கிராமத்தில் இருந்தும் கர்நாடகா பகுதி மலைக்கிராமத்தில் இருந்தும் மேலும் இரு மாநில மக்கள் சுமார் 10 லட்சம் பேர் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இதில் நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் முக்கியமானது. லட்சக்கணக்கான மக்கள் தீ மிதி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதுவும் பங்குனி மாதத்தில் தான் நடக்கிறது. இந்த திருவிழாவையும் தற்போது அதிகாரிகளோடு ஆலோசனை செய்து தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டதாகவும் திருவிழா தற்போது நடக்காது எனவும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் கூட்டத்தை தவிர்க்கவே இதுபோன்ற திருவிழாக்களை தள்ளிவைப்பது என அரசு முடிவு எடுத்துள்ளது. மக்களின் மத பக்தி நம்பிக்கை என்பது தான் அவர்கள் வணங்கும் கடவுள். இந்த கடவுளும் கண்ணுக்கு தெரியமாட்டார் மக்களை அழிக்க வந்துள்ள கரோனா வைரஸும் கண்ணுக்கு தெரிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் மக்களின் நம்பிக்கைக்கு உரிய கண்ணுக்குத் தெரியாத கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் வினோதமாக,விசித்திரமாகவும் உள்ளது.