
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளார்.
கரோனா தொற்று பரவலை தடுக்க மருந்து கண்டுபிடித்தது, முதல்வர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளை குணப்படுத்தியது, சுகாதார நிறுவனம் பற்றிய அவதூறு என பல புகார்கள் குறித்து சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்திற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார். அதில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் திருத்தணிகாசலத்தை மே 6-ஆம் தேதி கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். அவர் 4 நாட்கள் மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரித்த நிலையில், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தான் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றதாகக் கூறியதில்லை என்றும், பச்சிலை மற்றும் மூலிகைகள் மூலம் பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதாகவும் திருத்தணிகாசலம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த மூலிகை மூலமான நிவாரணங்களையே கரோனாவுக்கான மருந்தாக மக்களிடம் பிரபலப்படுத்தியதாகவும் வாதிடப்பட்டது.
ஜாமின் மனுவை நிராகரிக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் வாதிட்டபோது, கரோனாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்குடன் திருத்தணிகாசலம் பயன்படுத்தி உள்ளதாகவும், 1998-ல் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பெற்றதாக வைத்திருக்கும் சான்றிதழ் போலியானது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரிடம் இன்னும் விசாரணை முடியவில்லை என்றும், புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஸ்லின் துரை, கரோனா பரவலுக்கு எதிரான தவறான தகவலை பரப்பி வருவதை கருத்தில் கொண்டும், தனது வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலே சிகிச்சை அளிப்பதாகக் கூறுவதை கருத்தில் கொண்டும், தற்போதைய நிலையில் திருத்தணிகாசலத்தை ஜாமீனில் விடுவித்தால் அவரை போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துவிடும் என்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு தாக்கல் செய்யவுள்ளார்.