கரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்தியரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் பெற தவிர மற்ற எந்த பணிக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, கடைகள் திறக்ககூடாது என்பதற்காக மாவட்டம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், தேசிய மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில், கிராமப்புற கூட்டு சாலைகளில், முக்கிய பகுதிகளில் என காவல்துறை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்படி கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கும் காவலர்களுக்கு தேவையான உணவு, குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.
இதுப்பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறை கீழ்மட்ட காவலர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, "சுட்டெரிக்கும் வெய்யிலில் உட்கார சேர் கூட இல்லாம நின்னுக்கிட்டு இருக்கறது கூட கஷ்டமாயில்லை சார். ஆனா, தடுப்பு போட்டு போலீஸார் நிக்கறாங்களே அப்படிங்கற பயமே இல்லாம சும்மாவே இந்த பசங்க வந்து ஆர்ன் அடிச்சி திறக்கச்சொல்றாங்க. ஒருத்தன் இரண்டு பேர்ன்னா திறக்கலாம், மணிக்கு 20, 30 பேர் வர்றான். இப்படி வெளியில சுத்தக்கூடாதுன்னு சொன்னாலும் புரிஞ்சக்கறதேயில்லை.

அத்தியாவசிய பொருட்களை வாங்க போறவங்களை விட்டுடறோம். சும்மாவே சுத்தறதுக்காக வர்றவனை பார்க்கும்போது தான் கோபம் வருது. அரசாங்கம் நோய் பரவுது, வெளியே வராதிங்க காட்டு கத்தல கத்துது. அந்த பசங்களோட பெற்றோர்களுக்கு அது புரியுதா, புரியலையான்னே தெரியல. பையன் வீட்லயிருந்து வண்டி எடுக்கும்போதே எங்கடா போறான்னு கேட்டு தடுக்கறது கூடயில்லை. மாஸ்க் போடாமலே சுத்தறானுங்க. எங்க போறிங்கன்னு கேட்டால் கிட்ட வந்து தான் சட்டம் பேசறானுங்க. அப்படி பேசறவனுங்க பாதிப்பேருக்கு மேல போதை. வெளியில சுத்தறவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்தா பாதிப்பேர் இன்னேரம் உள்ளேயிருந்துயிருப்பாங்க. முதல் நாளே வாகனங்கள் பறிமுதல், பின்பக்கம் அடின்னு போட்டும் இந்த பசங்க திருந்த மாட்டேன்கிறாங்க.
நாங்க என்ன எங்களுக்காகவ இங்க டூட்டி பார்க்கறோம். காலையில் இருந்து சாயந்தரம் வரை, சாயந்திரம் முதல் இரவு வரைன்னு இரண்டு ஷிப்ட் டூட்டி பார்க்கறோம். இதே சாப்பிடறோமே இந்த மதிய சாப்பாட்டை கூட உட்கார்ந்து ஒருயிடத்தில் நிம்மதியா சாப்பிட முடியறதில்லை. நின்னுக்கிட்டே சாப்பிட்டுட்டு அப்படியே ஓடிப்போய் நின்னு டூட்டி பார்க்கறோம். தாகத்துக்கு தண்ணீர் இருக்கறதில்லை. அக்கம் பக்கம் வீடுகள்ள வாங்கி குடிக்கறோம். பசிக்கு டீ குடிக்கலாம்னா கூட கடை இல்லை.
ஷிப்ட் முடிஞ்சி நேராப்போய் அப்படியே வீட்டுக்குள்ள போக முடியவில்லை. எங்களுக்கும் குடும்பம்மிருக்கு துணியெல்லாம் வெளியிலயே கழட்டி போட்டுட்டு குளிச்சிட்டு போறோம். குழந்தைகளை தொட்டா அவுங்களுக்கு தொத்திக்குமோ அப்படின்னு பயமாயிருக்கு. நாங்க செத்தா இந்த அரசாங்கம் நஷ்டயீடு தரும், இதே எங்க குடும்பத்துக்கு ஏதாவது ஒன்னு ஆனா ஒன்னும் கிடையாது. அதுக்காக பயந்துக்கிட்டு லீவு போட்டுட்டு வீட்லயா இருக்கோம், பாதுகாப்பு பணிக்கு போகமாட்டோன்னு சொல்றோமா, திரும்ப வந்துதான் வேலை செய்யறோம்.
இந்த மக்கள் ஏன் அரசாங்கம் சொல்றதையும் புரிஞ்சிக்கறதில்லை, தெருவுல நின்னு அவுங்களுக்காக வேலை செய்யற எங்களையும் புரிஞ்சிக்கமாட்டேன்கிறாங்க" என வேதனையோடு பேசினார்கள்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்