கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது குறித்தும் செய்தியாளர்களிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ். இப்போது வரை 41 பேருக்கு கரோனா நோய் தாக்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்துள்ள பட்டியலில் 1 லட்சம் பேர் இடம் பிடித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்கிறார் பீலாராஜேஷ்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "தமிழக விமான நிலையத்தில் அனைவரையும் ஸ்க்ரீன் செய்தோம். யார், யாரை எல்லாம் ஸ்க்ரீன் செய்தோமோ அவர்களது பயண வரலாறு, அவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் என ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதேபோல, பேருந்து மற்றும் ரயில் மூலமாக தமிழகம் வந்தவர்களையும் அதேபோல ஸ்க்ரீன் செய்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. இப்படி எடுக்கப்பட்ட பட்டியலில் 1 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
அத்தனை பேரையும் தனிமைப்படுத்துவதுதான் சரியானது. அதன்படி 10 மாவட்டங்களில் 41 நோயாளிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்த மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவிருக்கிறோம். அந்த 10 மாவட்ட கலெக்டர்களுக்கும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 41 நபர்கள் இருக்கும் இடத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை கண்டைன்மெண்ட் மண்டலம் என அடையாளப்படுத்துவதுடன், மேலும் 3 கிலோ மீட்டர் தூரப் பகுதியை ‘பப்பர் ஜோன்‘ என குறிப்பிடப்படவிருக்கிறது. மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒவ்வொரு 50 வீடுகளுக்கும், ஒரு பணியாளர் நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட 50 வீடுகளையும் அவர் ஆய்வு செய்வார். அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என சோதித்துப் பார்ப்பார்கள்.
நியமிக்கப்படும் பணியாளர்கள், மருத்துவர்கள் போலவே கண்காணிப்பாளர்கள். மேற்கண்ட சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் முகக்கவசம் கொடுக்கப்படும். பப்பர் ஜோன் என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட சோதனைகள் செய்து பார்க்கப்பட்டு, அப்படி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் சமூக பரவல் தடுக்கப்படும்" என தெரிவித்தார்.