கரோனா வைரஸ் தாக்குதலால் பொது மக்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தினசரி வார, மாத இதழ்கள் உட்பட அனைத்து பத்திரிகைகளையும் கடைகளில் வைத்து விற்க முடியாத நிலையில், அவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணைப்புப் பாலமாக இருப்பவர்கள் “பேப்பர் பாய்ஸ்” என்று சொல்லக்கூடிய ஊழியர்கள்தான். இவர்கள்தான் பத்திரிகைகளின் பிரதான ஊழியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தினசரி காலை நாலு மணி முதல் வீடு வீடாக சென்று தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் பத்திரிகைகளை கொடுத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல நல்ல மனிதர்கள் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் செஞ்சியில் தினசரி பத்திரிகைகளை வீடு, வீடாக கொண்டுபோய் சேர்க்கும் 16 இளைஞர்கள் உள்ளனர். இப்படிப்பட்டவர்களின் சிரமங்களை கவனத்தில் கொண்ட செஞ்சி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் மேற்படி பதினாறு இளைஞர்களுக்கும் அரிசி, மளிகை, காய்கறிகள் என அவர்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் கொடுத்து உதவி செய்துள்ளார். அவரது உதவியை பெற்ற இளைஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.