சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் பிறந்தநாள் விழா இன்று (20.05.2024) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பண்டிதர் அயோத்திதாசரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் இதனைக்குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்!. முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில், திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு விழாவையொட்டி அதன் நினைவாக 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதியதாக அமைக்கப்பட்டது. இதனைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி (01.12.2023) திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.