சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 80 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் லிதுவேனியாவில் வில்னிஸ் பகுதியைச் சேர்ந்த நபரின் மனைவி, தான் விமானத்தில் வரும் போது சீனப் பெண்ணை சந்தித்ததாக விளையாட்டாக கூறியுள்ளார். இதைக்கேட்டு பயந்த கணவரும், இரண்டு மகன்களும் அந்த பெண் குளிக்கச் சென்ற போது குளியல் அறைக்கு வெளியில் தாழ்ப்பாள் போட்டு பூட்டியுள்ளனர். வெகு நேரம் கதவைத் தட்டிப் பார்த்த போதும் குடும்பத்தினர் கதவைத் திறக்கவில்லை. நல்ல வேளையாக அந்த பெண் குளியலறைக்குள் செல்லும் போது செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். அதன் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை குளியலறையில் இருந்து மீட்டனர். கணவரிடம் இது குறித்து விசாரித்த போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இதைச் செய்ததாக கூறியுள்ளார். அந்த பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனை கூட்டிச்சென்று பரிசோதித்த போது கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. அந்த பெண் தனது கணவர் மீது புகார் கொடுக்க மறுத்ததால் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்யாமல் சென்றுவிட்டனர். இச்சம்பவம் கொரோனா வைரஸ் உலக மக்களை எவ்வளவு அச்சத்தில் வைத்துள்ளது என்பதை காட்டுகிறது.