Skip to main content

கரோனாவால் ஆட்டம் காணும் கோழி பண்ணைகள்! முட்டை விலை வரலாறு காணாத வீழ்ச்சி!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

கரோனா வைரஸ் தொற்று பீதியால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி மட்டுமின்றி கறிக்கோழி வணிகமும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

 

Corona virus - Egg prices fall

 



கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியதாலும், அதன் தாக்கம் நாமக்கல்லிலும் இருக்கலாம் என வதந்தியால், இத்தொழில் கடந்த ஒரு மாதமாக கடும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு மையம் எனப்படும் என்இசிசி நிர்ணயம் செய்தாலும்கூட, அதைவிட 70 முதல் 90 காசுகள் வரை குறைத்தே பண்ணையாளர்கள் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 18) என்இசிசி, முட்டை விலையை அதற்கு முந்தைய விலையான 265 காசுகளில் இருந்து தடாலடியாக 70 காசுகளை குறைத்து 195 காசுகளாக நிர்ணயம் செய்தது. இந்த விலைக்குக் குறைவாக யாரும் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் என்இசிசி தலைவர் மருத்துவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அடுத்து, மார்ச் 25ம் தேதிதான் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்றாலும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தடாலடியாக முட்டை விலையைக் என்இசிசி குறைத்துள்ளது இப்போதுதான் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த விலையில் இருந்தும் 20 காசுகள் வரை குறைத்தே பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேநிலை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தால்கூட, ஒரேயடியாக கோழிப்பண்ணைகளை அழித்துவிட்டு தொழிலில் இருந்து வெளியேறி விட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்