சாமான்ய மனிதன் முதல் அறிவாற்றல் ஆளுமை மிக்க மனிதர்கள் வரை யாருடைய முகவரியையும் ஆழ்ந்து பார்க்காமல் ஊடுருவும் கொடிய ஆயுதமான கரோனா வைரஸ் தனது நீள் கரத்தை மேலும் மேலும் நீட்டி எல்லோரையும் பதைபதைக்க வைக்கிறது. எதற்கும் அஞ்சாத பல அரசியல் தலைவர்களையும் அவர்கள் இருப்பிடத்திலேயே முடங்க வைத்துவிட்டது அப்படி பாதுகாப்பாக இருந்தும் பலர் கரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி, சிலர் மரணமுற்றும் பலர் சிகிச்சை பெற்று குணமாகியும் வருகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான சி.மகேந்திரனுக்கு 29 ஆம் தேதி நடைபெற்ற பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுக்க கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், தொண்டர்கள், முற்போக்கு இலக்கியவாதிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சையில் உள்ள சி.மகேந்திரன் நம்மிடம்,
"லேசாக காய்ச்சல் இருந்தது, உடல் வலியும் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அது கரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதால் உடனே அட்மிட்டானேன். இது ஆரம்ப நிலைதான். சளி தொந்தரவு முழுமையாக இல்லை, காய்ச்சலும் குறைந்து வருகிறது. நலமாக இருப்பதை உணர்கிறேன்" என்றவர், வழக்கமான அரசியல் பேச்சுக்கு வந்தார் "இந்த கரோனா கூட நம்மிடம் கருணை காட்டும் ஆனால் எளிய மக்களை மேலும் மேலும் துன்பத்தில் தள்ளுகிறது இந்த ஆட்சியாளர்களின் சர்வாதிகார நடவடிக்கைகள். வழக்கமான வாழ்வியல் நடைமுறைகளையே புரட்டிப் போட்டுவிட்டது. இப்போதுள்ள அரசியல் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்டுகள் கூர்மையாக, அதே சமயம் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய தருணம் இது. மின்னணு வாக்குப்பதிவு, மற்றும் அதன் மிகப் பெரிய மோசடித்தனம் பற்றி ஒரு நாவலாக எழுதத் தொடங்கியுள்ளேன் தோழர்.." என உற்சாகமாக பேசினார். விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வாருங்கள் தோழர் என நலம் பெற வாழ்த்துகளை கூறினோம்.