
சென்னை போன்ற வெளிமாவட்டங்கள், மும்பை, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் அரபு நாடுகள் என வெளிநாடுகளில், தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் வேலையிலிருக்கின்றனர்.
கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட 50 நாட்கள் லாக்டவுனுக்கு பின்னர் அவர்கள் ஊர் திரும்ப அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சொந்த வாகனம் மற்றும் வேன்கள் மூலம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தென் மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயிலும் எல்லை பகுதியுமான கங்கை கொண்டான் சோதனை சாவடி நெரிசல்களால் திணறுகிறது. அவ்வாறு வருபவர்கள் எல்லை சாவடிகளிலேயே மடக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
கரோனா பாஸிட்டிவ் என்றால் சிறப்பு வார்டு சிகிச்சைக்கும், நெகடிவ் எனில் தனிமைப்படுத்தல் ஏரியாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த சோதனைக்காகவே, கூட்ட நெரிசல் ஏற்பட்டு திணறுவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒருவாரமாக, தென் மாவட்டங்களில் தொற்றுக் காணப்படாத நிலையில், தற்போது இவர்களின் வருகையால் தொற்று எண்ணிக்கை ஏறத் தொடங்கியிருக்கிறது.
இவர்கள் நாங்குநேரி, பழவூர், கூந்தன்குளம், ராதாபுரம், பாம்பன்குளம், மாவடி உள்ளிட்ட தென்மாவட்ட ஏரியாவை சேர்ந்தவர்கள். இதில் கத்தார் நாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்து நெல்லைக்குத் திரும்பிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 54 வயது முதியவருக்கும் அவரது மனைவிக்கும் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நெல்லை மாவட்டத்தின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தென்காசி மாவட்டத்தில் 54 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.