கரோனா கால ஊரடுங்கு விடுமுறையில் பள்ளிக்கூட சிறுவர்கள் பலர் விவசாயம் சார்ந்த பணிகளை செய்துவருவது பலதரபட்ட மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வகையில் மன்னார்குடி அருகே உள்ள சிறுவன் ஒருவன் இயற்கை விவசாயத்தில் பயிர்களை பயிரிட்டு அசத்தி வருகிறார்.
கரோனா தொற்று பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிவரை பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்த சூழலில் நகர்புற மாணவர்கள் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கியே கிடந்தனர். ஆனால் கிராமபுற மாணவர்கள் விவசாயம் சார்ந்த பணிகளிலும், பாரம்பரிய விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில் விடுமுறையை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் அருள்மொழி தம்பதியினர். இவர்களது குழந்தைகள் கவின்கார்கி, தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். கரோனா தொற்று பரவலால் தொடர்ந்து பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது, கவின்கார்கி விடுமுறையை பயன்படுத்தி தனது வீட்டின் அருகே உள்ள 1 ஏக்கர் விவசாய நிலத்தில் வெண்டை, நிலக்கடலை, அவரை, எள், தர்பூசணி, கீரை வகைகள், காய்கறிகள், பயிறு வகைகளை இயற்கை முறையில் பயிரிட்டு பராமரித்து வருகிறார்.
"பள்ளி ஆன்லைன் வகுப்பு பாடங்களை படித்துக்கொண்டு மீதமுள்ள நேரத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவதால் வீட்டிற்கு தேவையான காய்கறிகளும், கிடைப்பதுடன் அதனை விற்பனை செய்கிறேன்'' என்கிறான் கவின்கார்கி.
"விவசாயம் இன்று விவசாயமாகவே இல்லை. பாரம்பரியத்தை இழந்து எல்லாமே இயந்திரமயம், தாராளமயம், ரசாயனமயமாகிவிட்டது. அழிந்துவரும் நிலையில் இருக்கிறது விவசாயம். குழந்தைக பருவத்திலேயே நமது பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பணிகளின் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தி ஊக்கப்படுத்தினால் குழந்தைகள் ஆரோக்கியத்தோடு வளர்வதுடன் விவசாயம் குறித்து விழிப்புணர்வும், அதன் பயனும் வருங்கால தலைமுறைக்கு கொண்டுசெல்லும் தூண்டுகோலாக அமையும்" என்கிறார்கள் இயற்கை விவசாய ஆர்வளர்கள்.
இதுகுறித்து கவின்கார்கி கூறுகையில், "விவசாய பணியை பெற்றோர்களின் உதவியும், ஊக்கமும் இருந்ததால்தான் இதை செய்ய முடிந்தது, விவசாயத்தில் ஈடுபட்டதால் செல்போன், டிவி பக்கம் கவனம் போகல, தனக்கு உற்சாகமாக இருக்கிறது" என்கிறார்.
பெற்றோர்கள் கூறுகையில்," அடுத்த தலைமுறைவரையாவது நமது விவசாயம் காக்கப்படுமா என்கிற நிலமையாகிடுச்சி, ஒவ்வொருவரும் குழந்தை பருவத்திலேயே இயற்கை முறையில் விவசாய பணிகளை கற்றுக்கொடுக்கணும், அப்படி கற்றுக்கொள்ளும் போது விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதுடன் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும்" என்கிறார்கள்.