Kanyakumari police station case

குமரி மாவட்டம், பொன்மனை முல்லைசேரி விளையைச் சேர்ந்தவர் அஜித் (24). ஐ.டி.ஐ படித்துள்ள இவர், ஓட்டுநராக பணி செய்துவந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையான அஜித், அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவது வழக்கம். இதனால் அஜித் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் 3 அடிதடி வழக்குகள் உள்ளதாம்.

Advertisment

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒருவரிடம் தகராறு செய்து அவரை அடித்துள்ளார். இதனால் குலசேகரம் போலீசார், அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். 2 மாதம் சிறை வாசத்துக்கு பிறகு கடந்த 17-ம் தேதி பிணையில் வெளியே வந்த அஜித் குலசேகரம் காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்து போட்டு வந்தார்.

Advertisment

கடந்த 23-ம் தேதி கையழுத்து போட சென்ற அஜித் விஷம் குடித்து இருப்பதாக அவரை காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் 25-ம் தேதி அஜித் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அஜித்தை அடித்து காயப்படுத்தி அதன் பிறகு வாயில் விஷம் ஊற்றி கொன்று விட்டனர் என கூறி அஜித்தின் உடலை வாங்க மறுத்தனர்.

இதையடுத்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட காவல்துறையினர் அஜித்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அஜித்தின் தந்தை சசிகுமார், “என் மகனை குலசேகரம் போலீசார் அடிக்கடி மிரட்டி வந்தனர். அவன் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்தாலும் அவனை வழக்குகளில் ஈடுபடுத்தியே வந்தனர். இந்த நிலையில் தான் கையெழுத்து போட போன அவனை, போலீசார் அடித்ததில் இறந்து போனார்” என எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் கொடுத்தார்.

சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தக்கலை டி.எஸ்.பி கணேசன், காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின் உறவினர்கள் நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.