சென்னையில் இருந்து கொடைக்கானல் திரும்பிய திமுக கவுன்சிலர் உள்பட 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் திரும்பினார். அப்போது காட்டுப் பகுதியில் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று முடிவுகள் வெளியானபோது, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடன் வந்த மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரும் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கும், பலம்புதூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொடைக்கானலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் சீல் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் சுகாதார துறையினர் சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தொற்று இல்லாத நிலையில் இருந்த கொடைக்கானலில், சென்னையில் இருந்து திரும்பியவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் கொடைக்கானல் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதுபோல் கரோனவால் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகள் சீல் வைத்து அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களும்,வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.