
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(47). இவருக்கு சொந்தமான விவசாய நிலம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மேம்பாலம் அருகே உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி கொண்டு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகநாதன் மனைவி வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து இறங்கியுள்ளது. அவர்கள் லோகநாதன் வீட்டிற்குள் புகுந்து 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு புறப்பட்டனர்.
தூங்கி கொண்டிருந்த ஜெயந்தி, சத்தம் கேட்டு எழுந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் காரில் வந்த கொள்ளையர்கள் வேகமாக தப்பிச்சென்றனர். கொள்ளையர்கள் சென்ற கார் அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் வழியாக சென்றது. ஆனால், அப்போது அந்த வழியாக இரயில் வரவிருந்ததால் இரயில்வே கேட் மூடப்பட்டது. கொள்ளையர்களை துரத்திவந்த பொதுமக்களும் அவர்களின் கார் அருகே வந்ததால், கொள்ளையர்கள் சினிமாவில் நடப்பதுபோல், இரயில்வே கேட்டை வேகமாக மோதி உடைத்து தப்பிச் சென்றனர்.
கொள்ளையடித்தது சம்பந்தமாக வீட்டு உரிமையாளர் லோகநாதன், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குஜராத் மாநில பதிவு எண் கொண்ட காரில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.