Skip to main content

“2.5 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும்” - காவிரி நீர் ஒழுங்காற்று குழு!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
2.5 TMC Water must be opened Cauvery Water Management Committee 

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளி வாயிலாக இன்று (16.05.2024) நடைபெற்றது. அப்போது இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், “கர்நாடகா அரசு சார்பில் மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 3.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஜூன் மாதம் 9.17 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் அதனையும் கால தாமதம் இன்றி திறக்க  வேண்டும்” என வலியுறுத்தினர்.

அதே சமயம் கர்நாடக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், “கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கு கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலத்தின் வாதங்களையும் கேட்டறிந்த வினீத் குப்தா, “கர்நாடக அரசு காவிரியில் இருந்து மே மாத இருப்புப்படி 2.5 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் மே 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் மீண்டும் இது குறித்து இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதியாக தமிழகத்திற்கு எத்தனை டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா; தமிழக காங்கிரஸ் கண்டனம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Congress condemns Karnataka government on Cauvery issue

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டிய ஜூன் 12 ஆம் தேதி திறக்காத காரணத்தால் டெல்டா விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்தி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி 12 ஆம் தேதியில் இருந்து ஜூலை மாதம் இறுதிவரை நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஜூலை மாதம் வரை 1 டி.எம்.சி. நீரை திறந்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி மிக மிக குறைந்த நீரை தான் வழங்கும்படி கோரியிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடக அரசு தர மறுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இந்த போக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்துகிற செயலாகும். 

காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஏறத்தாழ 9 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி.யும் ஆக மொத்தம் 40 டி.எம்.சி. தண்ணீர் பெறுகிற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை 4.6 டி.எம்.சி. தான் கர்நாடக அரசு கடந்த 10 ஆம் தேதி வரை வழங்கியிருக்கிறது. இதன்படி ஏற்கனவே 19.3 டி.எம்.சி. தரவேண்டிய நீர் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு குறிப்பிடாமல் பொதுவாக 12 ஆம் தேதியில் இருந்து நாள் தோறும் 1 டி.எம்.சி. வீதம் ஜூன் 31 ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 1 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கிற வகையில் கர்நாடக அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். தண்ணீர் பற்றாக்குறையில் குறுவை சாகுபடியை நிறைவு செய்யாமல் இருக்கும் சிரமமான நிலையை கர்நாடக முதலமைச்சர் புரிந்துகொண்டு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மௌனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பது அநீதி” - அன்புமணி ராமதாஸ்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Anbumani Ramadoss said that it is injustice to deny water to Tamil Nadu

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு  தண்ணீர் திறக்க கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மறுப்பது அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு  டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்றும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.  கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றும்,  அதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர இயலாது என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் கூறுவது முழுக்க முழுக்க பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இன்று காலை நிலவரப்படி, 72.50 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து  கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளின் நீர்இருப்பு கடந்த 19 நாட்களில் 35 டி.எம்.சி அதிகரித்துள்ளது. மொத்தம் 114.57 டி.எம்.சி கொள்ளவுள்ள அணைகளில் மூன்றில் இரு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கும் நிலையில், அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுவதை எவரும் நம்ப மாட்டார்கள்.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி  தண்ணீரை திறந்து விட வேண்டும்.  இன்று வரை  23 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட  தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை.

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் ஆணையை காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த சில நாட்களில் உறுதி செய்த பிறகு தான்  கர்நாடகம் தண்ணீர் திறப்பதற்கான முறைப்படியான ஆணை பிறப்பிக்கப்படும். அதன்படி பார்த்தால் இம்மாத இறுதி வரை அதிகபட்சமாக 15 டி.எம்.சி தண்ணீர் மட்டும் தான் கிடைக்கும். அது  இம்மாத இறுதி வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு தான். அதைக் கூட தமிழகத்திற்கு வழங்க முடியாது என்று கர்நாடகம் மறுப்பது பெரும் அநீதி ஆகும்.  இதை அனுமதிக்க முடியாது.

கர்நாடக அணைகளில்  72 டி.எம்.சி தண்ணீர் இருந்தால் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம், அணைகள் முழுமையாக நிரம்பினால் தான் தண்ணீர் திறப்போம் என்று கூறுவதன் மூலம் தமிழ்நாட்டை  உபரி நீரை வெளியேற்றுவதற்காக வடிகாலாக கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது  என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் அனைத்து அத்துமீறல்களையும், அநீதிகளையும்  திமுக  அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் அம்மாநிலத்திற்கு இந்த அளவு துணிச்சலைக் கொடுத்துள்ளது.

காவிரி சிக்கலில் கர்நாடகம் இழைக்கும் அநீதியை தொடர்ந்து தமிழகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த சில நாட்களில் கூட்டி, இநத சிக்கலில் அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதன்பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தால் காவிரி மேலாண்மை ஆணைய விதி எண் 16-இன்படி  கர்நாடக அரசு மீது மத்திய அரசின் வாயிலாக நடவடிக்கை எடுக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டவாறு, அதன் தீர்ப்பை செயல்படுத்த காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தையும்  காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர  ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.