கரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாலும்கூட, மேலும் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் குணமடைந்ததால், அவர்கள் ஏப். 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்ற 17 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர, கரோனா அறிகுறிகளுடன் 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று குணமடைந்து வீடு திரும்பினாலும்கூட மேலும் 14 நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சேலம் களரம்பட்டியை சேர்ந்த ஒருவரும், தம்மம்பட்டியைச் சேர்ந்த ஒருவரும் இரு நாள்கள் முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு சத்தான காய்கறிகள், உணவுப்பொருள்கள், மருந்துகள் ஆகியவை வாங்கிக் கொடுக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இருவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு சென்றாலும்கூட அவர்கள் வீட்டிலேயே தங்களை மேலும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுடன் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.