Skip to main content

“ஹெல்மட் போடுவேன் போடாம போவேன் உனக்கென்னடா” மிரட்டிய காவலருக்கு அபராதம் 

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Constable fined for threatening to wear helmet

 

சென்னையில் ஆவடி அருகே தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற காவலர் ஒருவர் தலைக்கவசம் அணியுமாறு கூறிய இளைஞரை ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. 

 

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என ஆக்கப்பட்ட பிறகு காவல்துறையினர் ஆங்காங்கு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நியு ஆவடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சக வாகன ஓட்டியான காவலரிடம் ஹெல்மட் அணியுமாறு கூறியுள்ளார். 

 

இதனை தொடர்ந்து வழியில் தன்னிடம் தலைக்கவசம் அணியுமாறு கூறிய வாகன இளைஞரை நிறுத்திய காவல் அதிகாரி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

 

அந்த வீடியோ பதிவில் இளைஞர் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னேன் எனக் கூறவும் அந்த காவலர், “நான் தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல உனக்கு எதும் பிரச்சனையா. நான் ஹெல்மட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்ன பிரச்சனை? நீ ஹெல்மட் போட சொன்னது தப்பு தாண்டா போ”என கூறுகிறார். காவலர் சீருடையில் இருக்கும் அந்த காவலர் இளைஞரை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. 

 

இது தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்ததில், அந்த காவலர் மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவர் மீது தலைக்கவசம் போடாமல் வாகனம் ஓட்டியதற்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், தலைகவசம் அணியாமல் சென்றதற்கு மட்டுமே அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை அவதூறாக பேசியது குறித்து எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என அவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்