



சென்னை கோவிந்தசாமி நகர் குடியிருப்போர் சங்கத்தினருடன் இணைந்து பல்வேறு அமைப்பினர், இன்று கோவிந்தசாமி நகர் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைக் கண்டித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு துவக்கி வைத்தார்.
இந்தப் போராட்டத்தில் கோவிந்தசாமி நகர் குடியிருப்போர் சங்கம் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் பெண்ணுரிமை இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆகியோர் இருந்தனர். இந்தப் போராட்டத்தில், ‘தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் சட்டப்படி அரசால் அறிவிக்கப்பட்ட கோவிந்தசாமி நகர் குடிசை பகுதிக்கு அடிமனைப்பட்டா உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிந்தசாமி நகர் பகுதி குடியிருப்பு வாசி ஒருவர் தீக்குளித்து இறந்ததால் தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீதும் உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கோவிந்தசாமி நகரில் குடியிருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக அகற்றுதல் மற்றும் அவர்களை தொலைதூரம் கொண்டு செல்லும் செயலை நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர்.