
"வேண்டுமானால் எங்களது துணைச்சரகத்திற்குள் மணலைக் கடத்தி வாருங்களேன்." என பகிரங்கமாக மணல் திருடர்களுக்கு சவால் விட்டு, தொடர்ச்சியாக இரவு பகல் பாராது திருட்டு மணல் லாரிகளை வேட்டையாடி வருகின்றனர் சிவகங்கை மாவட்ட காரைக்குடித் துணைச்சரகப் போலீசார். பிடிப்பட்ட மணல் லாரிகளோ எட்டு காவல் நிலையங்கள் வாசலிலும் ஊர்வலத்திற்கு செல்வது போல் வரிசைக்கட்டி நிற்கின்றன.

இயற்கை மனித குலத்திற்கு வழங்கிய மகத்தான பொக்கிஷம் தான் ஆற்று மணலே.! பாதுகாக்க வேண்டிய நாம் கூறுப்போட்டு விற்கின்றோம். மாவட்டத்தில் மணல் வரத்து போதிய அளவில் இல்லாத்தால் அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் ஆவுடையார் கோவிலிருந்து ஆற்று மணலைத் திருடி வந்து, புரோக்கர்களைக் கையில் வைத்துக்கொண்டு காரைக்குடியில் கொள்ளை விலைக்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 யூனிட் மணல் வெறும் ரூ. 6ஆயிரம் தொடங்கி, ரூ.8 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட, சிவகங்கை மாவட்டத்திலோ அதனின் விலை ரூ.24 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை. இது மாவட்டத்திலுள்ள மற்றைய ஊர்களுக்கு மாறுபடும். இந்த திருட்டு மணல் குறுகிய காலத்தில் பலரை கோடீஸ்வரனாக்க, ஏனையோரும் இதனை முயற்சித்து வர மணல் லாரிகள் காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், விபத்துக்களை ஏற்படுத்தி குறுக்கு நெடுக்குமாக ஓடத் தொடங்கின. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் உள்ளூர் கவுன்சிலர், வட்டம் மற்றும் ஒன்றியத்திற்கு பிரித்ததுப் போக, வி.ஏ.ஓ, தாசில்தார் மற்றும் அந்தப் பகுதிப் போலீசார் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இதனால் கண்டும் காணாமலே திருட்டு மணல் விற்பனை கனஜோராக நடந்து வந்தது. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் தலைமையிலான காரைக்குடி துணைச்சரகப் போலீசார்.

காரைக்குடியில் வடக்கு மற்றும் தெற்கு , அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு மற்றும் சாக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கிய காரைக்குடி காவல்துறை துணைச் சரகத்தில் காரைக்குடி வடக்கில் 04, தெற்கில் 03, சோமநாதபுரத்தில் 04, அழகப்பாபுரத்தில் 04, பள்ளத்தூரில் 34, சாக்கோட்டையில் 44, குன்றக்குடியில் 11 மற்றும் செட்டிநாட்டில் 33 என திருட்டு மணல் கொண்டு வந்த 137 லாரிகளையும் பறிமுதல் செய்ததோடு கனிமவளச்சட்டத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இது கடந்தாண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட இருமடங்கு கூடுதலானது. " மாவட்ட எஸ்.பி. அறிவுரையின் பேரிலேயே, டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் வழிக்காட்டுதலில் இந்த துணிச்சலான முடிவை எடுத்து, மிரட்டல் களுக்கிடையே லாரிகளை பிடித்து வருகின்றோம். சில சமயங்களில் திருட்டு மணல் கடத்தும் சிலர் லாரியில் மணலைப் பரப்பி வைத்து விட்டு, போலீசிடம் சிக்கமால் இருக்க எம்.சாண்ட் மணலை நிரப்பி வைத்தும் கடத்தியிருக்கின்றனர். இதையெல்லாம் கவனத்தில் கொண்டே இருப்பதால் இத்தனை திருட்டு மணல் லாரிகளை பிடிக்க முடிந்தது. இந்த சரகத்தில் திருட்டு மணல் என்பதே கிடையாது." என பெருமிதப்பட்டுக் கொள்கின்றனர் காரைக்குடித் துணைச்சரகப் போலீசார். பொதுமக்களும் போலீசாரை பாரட்டி வருகின்றனர். நாமும் பாராட்டுவோமே.!