![collector did not attend the meeting, government employees used cell phone](http://image.nakkheeran.in/cdn/farfuture/QJ3kLKyu5OX0YowL_zbSBfQ3TezEuiTTPCWWlFa6McY/1722928330/sites/default/files/inline-images/8_135.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் மனு அளிப்பதற்காக வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் நேற்று(5.8.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குத் தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் ஆய்விற்காக உளுந்தூர்பேட்டைக்குச் சென்றுவிட்டார். மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாகக் கலந்து கொள்ள வேண்டிய மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளாத நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள், தங்களது செல்போனில் கேம் விளையாடியபடியும், திரைப்படங்களைப் பார்த்தவாறும், செல்போன் பேசியபடி என முழுவதுமாக செல்போனில் மூழ்கி இருந்து உள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ள பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.