
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, மாணவி முன்பு படித்த தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, அப்போதைய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாணவி எழுதியதாகக் கூறப்பட்ட கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மட்டுமின்றி மேலும் 2 பேரைக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்தக் கடிதத்தில் கூறப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாணவி எழுதிய கடிதம் உண்மைதானா? அது அவருடைய கையெழுத்துதானா? என்பதை அறிய சென்னை தடயவியல் துறைக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனுடன் சேர்த்து மாணவி எழுதிய நோட்டுகள், புத்தகங்கள் ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன.
அதன் முடிவு இன்னும் கிடைக்கவில்லை. அந்த முடிவு வந்த பிறகுதான் தடயவியல் துறையினர் உறுதிசெய்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கையெழுத்து பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றார் அந்த போலீஸ் அதிகாரி.