
குடிநீர் தவிர தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உள்பட எந்த மாநில அரசுகளுக்கும் அதிகாரமில்லை வனத்துறை அமைச்சகம் பசுமை தீர்ப்பாயத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பிற்கான நாளை எதிர்ப்பார்த்துக் காத்து இருக்கின்றனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலுள்ள மருதூர் அணையின் மேலக்கால்-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்-தென்கால் பாசனவாய்க்கால்கள் மூலமாக சுமார் 46,107 ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை, தென்னை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை ''பிசானம், கார், அட்வான்ஸ் கார்'' என முப்போக நெற்பயிர் சாகுபடி முறை தவறாமல் நடைபெற்று வந்தது. இதனால் விவசாயப் பெருங்குடி மக்கள் ஒரளவிற்கு வருமானம் பெற்று கடன் சுமைகள் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை, அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் 20 எம்.ஜி.டி.திட்டத்தில் தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு தாமிரபரணி பாசனக் கால்வாய்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதே அரிதாகி, முப்போக நெற்பயிர் சாகுபடியானது ஒருபோக நெற்பயிர் சாகுபடியாக மாறிப்போய் விட்டது. பொதுமக்களும் போதுமான அளவிற்கு குடிப்பதற்கு குடிதண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விவசாய நிலங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரானது உவர்ப்பாக மாறி விவசாயமும் நலிவடைந்து கொண்டே வருகிறது. பாசன விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் ''ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும்'' என்று பசுமை தீர்ப்பாயத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

இந்த பொதுநல வழக்கின் அடிப்படையில், " இந்நிலையில் இந்த பொது நல வழக்கு சென்னையில் இருந்து டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்க்கு மாற்றப்பட்டது. கடந்த 05.09.2018ம் தேதி அன்று மாண்புமிகு., நீதிபதி நீதியரசர் ரகுவேந்திர எஸ்.ரத்தோர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் டாக்டர். நாகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எஸ்.ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு., ரிதிவிக் தத்தா அவர்கள் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக சென்னை மண்டல அலுவலகத்தின் சார்பில் வனக்காப்பாளர் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான வனத்துறைக்குரிய இடத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க வேண்டுமெனில் அதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் முறையாக பெறவேண்டும். அதேபோல், குடிநீர் தவிர தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உள்பட எந்த மாநில அரசுகளுக்கும் அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-வடிகால் வாரியத்தினர் இதில் திட்டமிட்டே ''குடிநீர் தேவை'' என்ற பொய்யான காரணத்தை சொல்லி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வந்துள்ளனர். விதிமுறைப்படி 0.055 ஹெக்டேர் வனத்துறை இடத்தை பயன்படுத்த மட்டுமே அனுமதி பெற்ற நிலையில் அதனை மீறி 0.025 ஹெக்டேர் இடத்தை கூடுதலாக பயன்படுத்தி வருவதும் முற்றிலும் தவறானதாகும். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளையும், வனச்சட்டத்தையும் மீறி செயல்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-வடிகால் வாரியத்தினர் மீது தமிழக அரசு உடனடியாக வனச்சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும். அதோடு, ''முழுக்க முழுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முப்போக நெற்பயிர் சாகுபடி விவசாயத்தை முடக்கி வருவதுடன், குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் முக்கிய காரணமாக இருந்து வரும் 20 எம்.ஜி.டி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்து போராடி வருகிறார். இந்த தொடர் போராட்டம் எதிரொலியாக தமிழக வனத்துறையும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் மனுதாரருக்கு ஆதரவாகவே பிரமாண வாக்குமூலங்கள் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழக வனத்துறை அமைச்சகம் ''பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதியை மீறி, எக்காரணம் கொண்டும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கக்கூடாது'' என்று பசுமை தீர்ப்பாயத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் அடுத்த விசாரணை வருகிற 03.10.2018 அன்று நடைபெறும் என்று பசுமை தீர்ப்பாய அமர்வு அறிவித்துள்ளது. அந்நாளில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயப் பெருங்குடி மக்கள் கடன் சுமையால் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். அன்னை தாய்மார்களோ குடிப்பதற்கு குடிதண்ணீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் வரும் அக்டோபர் 3ம்தேதி பசுமை தீர்ப்பாயம் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ''20 எம்.ஜி.டி திட்டத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைத்து மாவட்டத்திலுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தடையில்லாத வாழ்வு அளித்திடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.