Skip to main content

முகம் தெரியாவிட்டாலும், சேவைகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த எஸ்.எஸ்.எஸ். சுப்பிரமணியம்..!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Coimbatore Gears Subramaniyam passes away


கோவை மக்களுக்கு பரிச்சியமான சாந்தி சோசியல் சர்வீஸ் (எஸ்.எஸ்.எஸ்) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். 

 

கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும் எஸ்.எஸ்.எஸ். அமைப்பின் அறங்காவலருமானவர் சுப்பிரமணியம் (78). தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், 1972ஆம் ஆண்டு ஒரு ‘லேத்’ இயந்தரத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு ‘கியர் வீல்கள்’ தயாரிக்க ஆரம்பித்தார். 

 

ஆரம்ப கால கட்டத்தில் ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்தவர். பின்னர் தொழிலை விரிவாக்கம் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவந்தார். இஸ்ரோ நிறுவனதிற்கும் இவரது தயாரிப்புகள் கொடுக்கபட்டன.


 

கடந்த சில வருடங்களுக்குமுன் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாந்தி கியர்ஸ் விற்கபட்ட நிலையில், பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கி அந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார். 


 

இந்த அமைப்பின் மூலம் லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் இயங்கிவரும் சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட  300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

 

மேலும் 30 ரூபாயில் மதிய உணவு, குறைந்த விலைவில் காலை சிற்றுண்டி என தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் வந்துச் சென்ற வண்ணமாக காணப்படும்.

 


அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30, மருந்துகளில் 30% தள்ளுபடி, குறைந்த பணத்தில் பரிசோதனை என பல்வேறு சலுகைகைகள் இருந்த காரணத்தால் எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும். சுப்ரமணியம் நடத்திய சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல், ஸ்டாக் வரும்போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படுவதால் அங்கும் வாகனதிற்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவது வழக்கம். 

 


இதன் எதிர்புறம் சாந்தி சோசியல் சர்வீஸ் இலவச மின்மயானமும் செயல்பட்டு வருகின்றது.  தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள கூடாது என ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம். 

 

Coimbatore Gears Subramaniyam passes away


கடந்த ஒரு மாததிற்கு முன் 78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க கலந்துக்கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவையில் துப்பாக்கியுடன் வலம் வரும் ரவுடிகள்; விசாரணையில் அம்பலமான சதித்திட்டம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 police arrested the robbers who were crawling with guns in Coimbatore

கோவை மாவட்டத்தில் செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால், வந்தவர்கள் வழக்கத்துக்கு மாறாக முகபாவனைகள் செய்யவே போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில்.. அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு சஞ்சய், கோவை தீத்திபாளையம் அருள் நகரைச் சேர்ந்த ஜலாலுதீன், கோவை இடையர்பாளையம் பி.என்.டி காலனியைச் சேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மூவரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும்.. இங்கே எதற்கு சுற்றித் திரிகிறீர்கள்.. என்ன விவகாரம் என போலீஸ் கேட்டபோது, அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த கும்பலில் இருந்து சஞ்சய் குமாரை  சோதனை செய்தனர். அப்போது ஒரு கை துப்பாக்கி இருந்தது. இதைக் கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக அதை அவனிடம் இருந்து பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அத்துடன் கடந்த ஆண்டு ரவுடி சஞ்சய் ராஜூ, ஆவாரம்பாளையத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் வெளிவந்தது. மேலும், இதில் சம்மந்தப்பட்ட ரவுடி கும்பலின் தலைவன் சஞ்சய் ராஜ், தற்பொழுது கோவை சிறையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது, இந்த கும்பலுக்கு இடையூறாக பொன் குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச்சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக, சிக்கியவர்கள் போலீசிடம் தெரிவித்தனர். அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுஸ்சிங் யூனிட்டை சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேலும் சஞ்சய் ராஜ், காஜா உசேன் ஆகியோர் மூளையாக செயல்பட்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற சதி செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கிலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர், கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் கணிப்பு! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Chance of very heavy rain Meteorological Center forecast

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று (26.06.2024) ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்படுகிறது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (27.06.2024) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.