
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்; அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கு கடந்த 8 ந் தேதி பிறந்தநாள். இவரது பிறந்த நாளுக்காக அவரது ஆதரவாளர்கள் நேரில் வாழ்த்துகள் கூறி பரிசுகள் வழங்கியதுடன் மாவட்டம் முழுவதும் ஏராளமான வாழ்த்து பதாகைகள் வைத்திருந்தனர்.
அதேபோல புதுக்கோட்டை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானா அருகே திருச்சி சாலையில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் பெரிய வாழ்த்து பதாகை வைக்கப்பட்டிருந்தது. பிறந்தநாள் முடிந்து 3 நாட்கள் கடந்தும் அகற்றப்படாமல் நேற்று மாலை வரை நன்றாக இருந்த பதாகை இரவில் யாரோ பதாகையில் இருந்த படங்களில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் தவிர விஜயபாஸ்கர் படம் முதல் அதில் இருந்தவர்களின் முகத்தை கிழித்துவிட்டுள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக மாஜி அமைச்சரின் பதாகை யாரால் கிழிக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது.