சிதம்பரத்தில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பொது விநியோகத் திட்டத்தில் கூட்டுறவுத்துறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 13 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளோம். இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் பணிவரன்முறை, 100% கணினிமயம்,உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அரசும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் இன்று வரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை. எனவே இந்த 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து அனைத்து ரேசன் கடை ஊழியர்களும் கலந்து கொள்வார்கள். தமிழக கூட்டுறவுத்துறையில் 33 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளது.
இதில் பணியாற்றும் ஊழிர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு சரியாக சம்ளம் கொடுப்பது இல்லை. ஊழிர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டு தொகை, பி.எப் தொகை, கூட்டுறவு கடன் ஈவு தொகை ஆகியவையை ஊழியர்களின் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்று முறைகேடாக பணத்தை எடுத்து கூட்டுறவுத்துறை நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்துள்ளது.
கேரளத்தில் பயோமெட்ரிக் முறையை அமுல்படுத்தி ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிகத்திலும் அதனை அமுல்படுத்த கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதே போல் மக்கள் விரும்பும் பொருட்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும். ரேசன் கார்டுக்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்" என்றார். இவருடன் மாநிலப்பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, மாநில நிர்வாகி சேகர், மாவட்ட துணை தலைவர் நடராஜன், சங்க நிர்வாகி இளவரசன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.