2025ஆம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் உற்பத்திக்காகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 100 கோடி அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்100 கோடி ரூபாய் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.