
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகள் இணைந்து, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்” அமைக்க வேண்டும் என இன்று (24.04.2025) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதனையடுத்து இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பாமக உறுப்பினர் ஜி.கே. மணி பேசுகையில், “பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என பல்வேறு தலைவர்கள் பெயரிலும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன எனவே முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் ஏன் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது?” எனப் பேசினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “ஜனநாயகத் தலைவர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்” எனப் பேசினார். இதனை ஏற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கும் கலைஞருக்கு விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என அறிவித்தார். இதற்கு அவையில் இருந்த உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.