சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க., வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன், அமைச்சர் பன்னீர்செல்லம் தலைமையில் புவனகிரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மருதுாரில் ஓட்டு சேகரித்தவர், நிகழ்ச்சியில் திட்டமிட்டவாறு அருகில் உள்ள பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க சென்றார். இதில் வி.சி.க., இளைஞர்கள் கிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு தனித்தனியாக அழைத்தனர். அதற்கு திருமாவளவன் நேரம் குறைவாக உள்ளது. பிறகு வந்து சந்திக்கிறேன், திட்டமிட்டவாறு சில கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.
இதில் சிலர் வேறு ஊருக்கு செல்லட்டும் வழி விடுங்கள்.. என்றனர். இதனால் இளைஞர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கெண்டனர். மேலும் எங்கள் ஊருக்கு வரவேண்டும் என கோரி மருதுார் – ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆனதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
போலீசார் இல்லாததால் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திருமாவளவன் வேறு ஊருக்கு ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் இரவு 9.00 மணிக்கு தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் போலீசாரிடம் முரண்பாடாகப் பேசினர். இதனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் குறைந்த அளவில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்தனர், இதனால் புவனகிரிக்கு வந்த திருமாவளவன், இரவு காலம் கடந்து வந்ததால் ஓட்டு கேட்காமல் கையை அசைத்தவாறு திரும்பிச்சென்றார்.