தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம் இருப்பதாக வெந்தந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கோரிய வழக்கில் வேதாந்தா நிறுவனம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
கடந்த வருடம் மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி ஆலையானது மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை நாடிய நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் புதியதாக தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தூத்துக்குடி சிப்காட்டில் இருக்கக்கூடிய 60 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலைதான் நச்சுவாயுக்களை வெளியிடும் ஆலையாக உள்ளது என கூறியிருந்தது. இதற்கான விளக்க மனுவை நேற்று வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்தது. அந்த மனுவில், நீரி (என்.இ.இ.ஐ) எனப்படும் தேசிய சுற்றுசூழல், பொறியியல் நிறுவனம் 2011 யில் நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை அளித்துள்ளது. அதேபோல் ஆலையை இயக்கவேண்டும் என ஒன்றரை லட்சம் பேர் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எந்த ஆவண ஆதாரங்களும் இல்லாமல் அரசு ஆலையை மூடியுள்ளது என கூறப்பட்டது. மேலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது எனவும் வேதாந்தா குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம் இருப்பதாக வெந்தந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தன் தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்து வாதாடியது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அரியாமாசுந்தரம் 100 நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் மே 22 ஆம் தேதி மட்டும் எப்படி 20 ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்பது தெரியவில்லை. இது ஆலைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையும், பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவுமே ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியுள்ளது. இந்த போராட்டத்தில் தனியார் என்ஜிஓ நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உலக அளவிலேயே அதிக தாமிரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக நாங்கள்தான் இருக்கிறோம் ஆனால் எங்களுக்கு போட்டியாக உள்ள சீன நிறுவனம்தான் போராட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளதாகவும், இதில் சதி இருப்பதாகவும் வேதாந்தா குற்றம்சாட்டியுள்ளது. இந்த வாதத்தின் பிறகு நீதிமன்றத்தின் நேரம் முடிவடைந்ததால் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.